இந்தோனேசியா, ஜன. 21-
இந்தோனேசியா, மத்திய ஜாவாவில் Pekalongan எனுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காணாமல் போயிருப்பதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று மாலையில் நிகழ்ந்த அப்பேரிடரில் இரு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், இரு பாலங்கள் சேதமடைந்து சில வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இன்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சம்பவத்தில் காயமடைந்த பத்து பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
Pekalongan பகுதியில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு குறைவான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை, கால நிலை மற்றும் புவியியல் மையம் கணித்துள்ளது. அதனால் வெள்ளம், திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து மக்களுக்கு நினைவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.