வாஷிங்டன், ஜன.21-
அமெரிக்காவின் 47-வது அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இனி இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று டிரம்ப சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனித் திட்டம் வகுப்படும்.
மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.