புத்ராஜெயா, ஜன.21-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரு புதல்வர்களான Mokhzani Mahathir மற்றும் Mirzan Mahathir ஆகியோரின் சொத்து விபரங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மனைநிறைவு கொள்வதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.
மகாதீரின் இரு புதல்வர்களின் சொத்து விபரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்ததில் தாம் மனநிறைவு கொள்வதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
31 கோடியே 60 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தனது தனிப்பட்ட சொத்துக்களுடன் கிட்டத்தட்ட 100 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை மொக்ஸானி காட்டியிருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.
அதேவேளையில் அவரின் சகோதரர் Mirzan Mahathir, 24 கோடியே 62 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை காட்டியுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
இவ்விரு சகோதரர்களின் சொத்து விபரங்கள், தடயவியல் ஆய்வாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இன்னும் சில விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாததால் விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.