கோலாலம்பூர், ஜன.22-
கஸானா எனப்படும் தேசிய கரூவூல முதலீட்டு நிறுவனம் மற்றும் பிஎன்பி எனப்படும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் ஆகியவற்றின் நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக பேஷன்வாலட் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தோற்றுநர்களான டத்தின் விவி யுசோப் மற்றும் அவரின் கணவர் டத்தோ பாட்சாருடின் ஷா அனுவார் ஆகியோர் கோலாலம்பூர் செஷன்ஸ் நிதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மொத்தம் 80 லட்சம் ரிங்கிட்டை அத்தம்பதியர் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. 37 வயது டத்தின் விவியும், 36 வயது அவரின் கணவர் டத்தோ பாட்சாருடினும் நீதிபதி ரோஸ்லி அகமட் முன் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
நேர்மையற்ற முறையில் குற்றவியல் நோக்கத்துடன் அந்த தேசிய முதலீட்டு நிதியை அவர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி கோலாலம்பூர், பிளாஸா டாமன்சாரா, புக்கிட் டாமன்சாரா, மேடான் செத்தியா 2இல் உள்ள பப்ளிக் வங்கியில் அத்தம்பதியர் இந்த முறைகேட்டைப் புரிந்துள்ளனர் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 403 பிரிவின் கீழ் பிரபலமான அந்த தம்பதியர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.