அம்பாங், ஜன. 22-
தனது 25 வயது காதலியின் 6 வயது மகனை அடித்து, சித்ரவதை செய்து கொன்றதாக 35 வயது ஆடவர் ஒருவர், அம்பாங், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ரெட்ஸா ஜைனுரின் என்ற அந்த ஆடவர் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி சிலாங்கூர், புக்கிட் அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட நபருடன் கூட்டு சேர்ந்து, தனது மகனுக்கு எதிராக படுபாதகத்தைப் புரிவதற்கு துணை நின்ற குற்றத்திற்காக அந்த சிறுவனின் தாயாருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
சம்பந்தப்பட்ட ஆடவர், தனது மகனை அடிப்பதற்கு அனுமதித்ததாக அந்த மாது மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.