தெலுக் இந்தான், ஜன.22-
தெலுக் இந்தான் இந்து சங்கம் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தப் பொங்கல் விழாவிற்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான Nga Kor Ming மற்றும் தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ கா லியோங் சிறப்பு வருகை புரிந்தனர்.
இப்பொங்கல் விழாவில் உரையாற்றிய வூ கா லியோங், கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவும் அளவிற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு நல்கி வரும் தெலுக் இந்தான் வாழ் இந்தியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை பேரா மாநில அரசாங்கம் அதிக அக்கறை கொண்டிருப்பதையும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
பேரா மாநில இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் 20 லட்சம் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி கடந்த 2024 ஆம் ஆண்டு 50 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதுடன் இவ்வருடம் இந்த நிதி 60 லட்சம் ரிங்கிட்டாக தொடர்ந்து உயர்த்தப்படும் என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் வூ கா லியோங் குறிப்பிட்டார்.
தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு தொகுதி எம்.பி. என்ற முறையில் Nga Kor Ming- கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாமும் வருகை புரிந்து 20 லட்சம் ரிங்கிட் வரை நிதியை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.
மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் பல்லின மக்களின் நலனை பாதுகாத்து வரும் டிஏபி.க்கும். பக்காத்தான் ஹராப்பானுக்கும் மக்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்க வேண்டும் என்று வூ கா லியோங் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.