பெட்டாலிங் ஜெயா, ஜன.22-
பூச்சோங்கில் ஆயுவேத வைத்தியர் ஒருவர், போலி டாக்டர் பட்டத்தையும், போலி டத்தோஸ்ரீ அந்தஸ்தையும் தனது பெயருக்கு முன்னாள் சூட்டிக்கொண்டு, மருத்துவ சிகிச்சையைச் செய்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் A.A. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆயுர்வேத வைத்தியர், சுகாதார அமைச்சு அல்லது மருத்துவம் தொடர்புடைய இதர அரசாங்க ஏஜென்சியின் சான்றிதழ் அல்லது லைசென்ஸின்றி மருத்துவம் பார்த்து வருவதாக நம்பப்படுகிறது என்று அன்பழகன் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட வைத்திருக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் அடிப்படையில் சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை, பண்டார் பூச்சோங்கில் உள்ள அந்த ஆயுர்வேத வைத்தியரின் வர்த்தகத் தளத்தில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த வர்த்தகத் தளம் செயல்படுவதற்கான ஊராட்சி மன்ற உரிமத்தை அந்த ஆயுர்வேத மையம் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அன்பழகன் குறிப்பிட்டார்.
அந்த ஆயுர்வேத வைத்தியர் சட்டவிரோதமாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி டத்தோஸ்ரீ மற்றும் டாக்டர் பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ள அங்கீகரிக்கப்படாத விருது மற்றும் பட்டம் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த வைத்தியர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.