புத்ராஜெயா, ஜன.22-
சபா, லாஹாட் டாத்து மருத்துமனையில் பணியாற்றிய தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பெண் மருத்துவ நிபுணர் டாக்டர் தேய் தியேன் யா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பகடிவதை அல்லது வஞ்சிக்கப்பட்டதன் விளைவாக நிகழ்ந்தது அல்ல என்று விசாரணைக்குழு தனது அறிக்கையை வெளியிட்டது.
அந்த மருத்துவ நிபுணர், தனது பணித்தன்மைக்கு அப்பாற்பட்ட கடமைகள் வழங்கப்பட்டு, அவருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று சுகாதார அமைச்சினால் டான் ஶ்ரீ போர்ஹான் டோல்லா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது முடிவை இன்று அறிவித்தது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் முன்னிலையில் விசாரணை முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த மருத்துவரின் பணித்தன்மையானது, குழு அடிப்படையில் அமைந்திருந்ததால் அவர் நெருக்குதலுக்கு ஆளாகுவதற்கு எந்த சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
ஆனால், ஓன் கால் மருத்துவர் என்பதால் தமது பணித்தன்மைக்கு உட்பட்ட விவகாரங்களில் பதில் சொல்வதற்கு அவர் கடமைப்பட்டுள்ளார்.
பொறுப்பு கூறல்களுக்கு பதில் சொல்ல வேண்டியது, அவரின் கடமையின் ஒரு பகுதியாகும் எ ன்று டான் ஶ்ரீ போர்ஹான் தெளிவுபடுத்தினார்.
30 வயது அந்த பெண் மருத்துவ நிபுணர் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் பணியாற்றுவதற்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியது தொடர்பில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.