கோலாலம்பூர், ஜன.23-
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்களுக்கு தங்கியது, முறையான பயண ஆவணங்களை கொண்டிருக்காதது முதலிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் குழுமுகின்ற முக்கிய சுற்றுலா வர்த்தகத் தளமாக புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் இரவு 7.15 மணியளவில் இந்த சோதனை தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் 71 வங்காளதேசப் பிரஜைகள், 60 மியன்மார் பிரஜைகள், 24 இந்தோனேசியர்கள், 16 நேப்பாளியர்கள், மூன்று பாகிஸ்தானியர்கள், எகிப்து மற்றும் சூடானை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாக வான் சௌபீ குறிப்பிட்டார்.