கிள்ளான் துறைமுகம், ஜன.24-
மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத உறைந்த இறைச்சியையும் உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கோழி, ஆடு, வாத்து, தவளை இறைச்சி உட்பட பல்வேறு உறைந்த உணவுகள் மேற்கு துறைமுகங்களிலும் வடக்கு துறைமுகங்களிலும் கைப்பற்றப்பட்டன. இந்த பொருட்கள் சரியான இறக்குமதி அனுமதி இல்லாமல் தவறான ஆவணங்களுடன் இறக்குமதி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய வட்டார சுங்கத்துறையின் உதவி இயக்குநர் நொர்லேலா இஸ்மாயில் குறிப்பிட்டார்.
மேலும் மற்றொரு வழக்கில் 1.69 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 9.7 கிலோகிராம் சட்டவிரோத புகையிலையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த புகையிலை பொருட்களும் உணவு, பானங்கள் என்று தவறாக அறிவிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் மீது சுங்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.