சிம்பாங் மோரிப், ஜன.24-
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு மற்றும் MYSA எனப்படும் மலேசிய விண்வெளி நிறுவனத்தின் இணை ஆதரவில் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு “100 நாட்கள், 100 பள்ளிகள், 100 ஆய்வாளர்கள்” எனும் கருபொருளில் மடானி இளம் விண்வெளி பொறியியலாளர் திட்டம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சிலாங்கூர், சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி பங்கு கொண்டது மட்டும் அல்லாமல், பந்திங்கில் உள்ள தேசிய விண்வெளி நிறுவனத்திற்கு நேரடிக் களப்பயணம் மேற்கொண்ட முதல் தமிழ்ப்பள்ளி என பெருமையும், பாராட்டையும் பெற்றது.
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சின் இந்த முன்னோடித் திட்டத்தில் கலந்து கொண்ட 100 பள்ளிகளில் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியும், பேரா, சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்.

3 கட்டங்களாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதற்கட்ட்டமாக, MYSAவைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் கார்த்திகேசு வழிநடத்திய கருத்தரங்கில் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 46 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அதில், விண்வெளி, கோள்கள், செயற்கைக் கோள்கள், அவற்றின் செயல்பாடுகள், விண்கலங்கள் போன்றவை குறித்து விளக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, விண்ணில் பாய்ச்சப்படும் விண்கலங்கள், செயற்கைக் கோள்கள், அவை சார்ந்த தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்தக் கட்டமாக, பந்திங்கில் உள்ள தேசிய விண்வெளி நிறுவனத்திற்கு நேரடிக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
வெறும் பாடநூலில் உள்ளத் தகவல்களை மட்டும் படித்திடாமல், அன்றாட வாழ்வில் அவை எவ்வாறு கலந்துள்ளது என்பதனையும், குறிப்பாக, இளம் வயதிலேயே விண்வெளி சார்ந்த துறையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தத் திட்டத்தில் இணைந்ததாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வத்துமலை பழனியாண்டி குறிப்பிட்டார்.
