கோலாலம்பூர், ஜன.24-
தம்மை மருத்துவர் என்றும், டத்தோஸ்ரீ அந்தஸ்துக்குரியவர் என்றும், கூறிக்கொண்டு, பூச்சோங்கில் ஆயுர் வேத மருத்துவச் சிகிச்சையை செய்து வந்த வைத்தியரின் வர்த்தகத் தளத்தில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் போலி டத்தோஸ்ரீ அந்தஸ்துக்குரிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. A.A. அன்பழகன் தெரிவித்தார்.
பண்டார் பூச்சோங்ஜெயாவில் உள்ள அந்த வைத்தியரின் வர்த்தகத் தளத்தில் சுபாங் ஜெயா மாநகர் மன்றமும், சுகாதார அமைச்சும் இந்த சோதனையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முக்கிய ஆவணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் 54 வயதுடையை அந்த வைத்தியருக்கு சொந்தமான டத்தோஸ்ரீ என்று பெயர் பொறிக்கப்பட்ட சீருடைகள் மற்றும் பதாகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அன்பழகன் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்படாத டத்தோஸ்ரீ அந்தஸ்துக்குரிய விருதை தமது பெயருக்கு முன்னாள் பதித்ததற்காக 2017 ஆம் ஆண்டு விருதளிப்பு குற்றவியல் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் இப்பொருட்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
டத்தோஸ்ரீ அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த நபருக்கு எதிராக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டு இருப்பதையும் அன்பழகன் சுட்டிக்காட்டினார்.