எண்ணெய் பெடலை அழுத்தும் சத்தம் கேட்டது

ஜோகூர்பாரு, ஜன.25-

கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ஜோகூர்பாரு, பண்டார் பாரு ஊடாவில் தொடக்கப்பள்ளி அருகில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த BMW காருக்குள் தாயும் மகளும் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய போதிலும் பள்ளி பாதுகாவலர் வெளியிட்டுள்ள தகவல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

அந்த BMW காரின் எண்ணெய் டாங்கியின் ஏற்பட்ட பெட்ரோல் கசிவின் காரணமாக அது குளிர்சாதனப்பெட்டியில் கலந்து நச்சுவாயுவை வெளியேற்றியிருக்கக்கூடும். இது தாயையும் மகளையும் மூச்சடைக்கச் செய்து இருக்கலாம் என்று போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

42 வயது தாயும், 14 வயது மகளும் சுயநினைவின்றி இறந்து கிடந்தது இரவு 9 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், அந்த BMW கார், பிற்பகல் 2 மணியளவில் பள்ளிக்கு அருகில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதைத் தாம் பார்த்ததாக பள்ளி பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த கார் சாலையோரத்தில் நின்றது, தமக்கு எந்தவொரு சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த பாதுகாவலர் கூறினார். ஆனால், சில மணி நேரம் கழித்து அந்த கார் இயந்திரம் முடுக்கி விடப்பட்ட நிலையில் எண்ணெய் பெடல், அழுத்தப்பட்டதன் காரணமாக காரின் சத்தம் பள்ளி வரை கேட்டதாக அந்த பாதுகாவலர் தெரிவித்தார்.

சற்று தொலைவில் இருந்தவாறு அந்த ஆடம்பரக் காரைத் தாம் கவனித்த போது, கறுப்பு நிற கண்ணாடியில் எதனையும் தம்மால் பார்க்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

எனினும் இரவு 7 மணி வரையில் அந்த காரிலிருந்து யாரும் வெளியேறவில்லை. ஆனால். காரின் இயந்திரம் செயல்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் சந்தேகித்த தனது சக பணியாளர், அவ்விடத்திற்கு சென்று பார்த்த போது, காரில் இருவர் இறந்து கிடக்கின்றனர் என்ற தம்மிடம் தெரிவித்தப் பின்னரே ஏதோ ஒரு சம்பவம் காரில் நடந்துள்ளது என்பதைத் தம்மால் உணர முடிந்ததாக அந்த பள்ளி பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS