கோத்தா கினபாலு, ஜன.25-
Puffer Fish எனப்படும் கேளமீன் உட்கொண்டதன் விளைவாக ஐந்து விஷ உணவு சம்பவங்கள், சபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஐவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி கோத்தாகினபாலுவில் முதல் சம்பவம் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 24 ஆம் தேதி கோத்தா மருடுவில் நான்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. கோத்தா மருடுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டதாக சபா சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மரியா சுலைமான் தெரிவித்தார்.
15 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள் உள்ளூர் சந்தையில் வாங்கிய கேளமீனை சமைத்து உண்டப் பின்னர் வாந்தி, வயிற்றுப்போக்கு, கைகால்கள் உணர்வின்மை, மூச்சுத்திணறல் முதலிய உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக டாக்டர் மரியா குறிப்பிட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மூவர் வீடு திரும்பிய வேளையில் இருவர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கேளமீனில் Tetrodotoxin எனும் TTX நச்சு அமிலத்தன்மை உண்டு. கடல் உயிரினங்களான கடற்குதிரை, நண்டு, கடல் நத்தைகள் மற்றும் சில கடல்சார் உயரினங்களில் இவ்வகை நச்சு அமிலம் அதிகமாக உள்ளன என்று டாக்டர் மரியா விளக்கினார்.