கோத்தா டாமான்சாரா, ஜன.26-
சீனப் புத்தாண்டை முன்னிட்டு SHMMP எனப்படும் விழாக் கால அதிகபட்ச விலை கட்டுப்பாட்டுத் திட்டம் , ரஹ்மா மடானி விற்பனைத் திட்டம் ஆகிய இரண்டையும் சிலாங்கூர் அரசு ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது. இதன் மூலம் விழாக் காலங்களில் பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் பின் முகமட் அலி தெரிவித்தார்.

இந்த திட்டங்களின் மூலம் பயனீட்டாளர்கள் நியாயமான விலையில் பொருட்களை வாங்க முடியும். அவை செயல்படுத்தப்படுவதால் பயனீட்டாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டங்கள் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 2 வரை சிலாங்கூரில் 27 இடங்களில் நடப்பில் இருக்கும் என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று கோத்தா டாமான்சாரா என்.எஸ்.கே பேரங்காடியில் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஶ்ரீ அமிருடின் பின் ஷரி, சிலாங்கூர் மாநில புறநகர் மேம்பாடு, ஒருமைப்பாடு, பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹஜி ரிசாம் பின் ஹஜி இஸ்மாயில் ஆகியோர் விலைக் கட்டுப்பாட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட வியாபாரிகள் அதிகமாக விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கடைகளின் உரிமையாளர்கள் இளஞ்சிவப்பு நிற விலைப்பட்டியலை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.