செப்பாங், ஜன.26-
விழாக் காலங்களில் விமானக் கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியால் மக்களின் அதிருப்தி குறைந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். அதிகபட்ச கட்டண நிர்ணயமும் மானியங்கள் வழங்கியதன் மூலமும், முன்பு 2000 ரிங்கிட் வரை இருந்த கட்டணங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. இது அரசின் ஒரு வருட நடவடிக்கையின் வெற்றிக்குச் சான்றாகும் என்றார் அவர்.
அரசு அதிகபட்ச கட்டணமாக 499 ரிங்கிட்டை நிர்ணயித்திருந்தாலும், சில விமான நிறுவனங்கள் 300 ரிங்கிட் வரை குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குகின்றன. இது அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இந்த முயற்சியால் விமானங்களில் 95 விழுக்காடு இருக்கைகள் நிரம்பியுள்ளதாக அவர் கூறினார்.
தேவையை பூர்த்தி செய்ய மாஸ், ஏர் ஆசியா, பாதேக் ஏர் போன்ற விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன. சபா – சரவாக்கிற்கு 349 ரிங்கிட் முதல் ஒரு வழி நிலையான கட்டணத்தை மாஸ் வழங்குகிறது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.