சுங்கை பூலோ, ஜன.26-
கிள்ளான் மாவட்ட நில அலுவலக ஊழியர்கள் சட்டவிரோத நிலப் பரிமாற்ற கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். இந்த சட்டவிரோத செயலில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையேடு முறையில் இருந்து கணினி முறைக்கு மாறிய சமயத்தில், சில அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த மோசடி வேறு மாவட்டங்களுக்கும் பரவியிருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். தொழில்நுட்ப மாற்றங்களையும் கணினி பராமரிப்பு நேரத்தையும் பயன்படுத்தி இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 17 பேரில் 7 அரசு ஊழியர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் விசாரணை முடியும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.