கோலாலம்பூர், ஜன.26-
தாதியர் பணிகளுக்கு இளங்கலை பட்டப் படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மலாயா தாதியர் சங்கம் இந்த கோரிக்கையை சுகாதார அமைச்சகத்திடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் சாய்டா அட்மான் தெரிவித்தார், இளங்கலை பட்டம் பெற்ற தாதியர்களுக்கு தற்போது கிடைக்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கிடைக்கும் என BH ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த முறையை பின்பற்றி வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையும் இதை வலியுறுத்துகிறது. குறைந்த சம்பளம் காரணமாக டிப்ளமோ படித்தவர்களை அரசு மட்டும் இன்றி தனியார் மருத்துவமனைகளிலும் அதிகம் பணியமர்த்துவதால், இளங்கலை பட்டம் பெற்ற தாதியர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என சாய்டா அட்மான் மேலும் கூறினார்.