பெட்டாலிங் ஜெயா, ஜன.27-
நாட்டின் தலைமை நீதிபதியாக வீற்றிருக்கும் துன் தெங்கு மைமுன் துவான் மாட்டின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ சாயிட் இப்ராஹிம் விடுத்துள்ள கோரிக்கைக்கு மூன்று வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சரின் இந்த பரிந்துரை, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 125 க்கு முரணானது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணரான Bastion Pius Vendargon தெரிவித்துள்ளார்.
சேவையில் இருந்து வரும் நீதிபதிகள்,கூடிய பட்சம் 66 வயது வரை மட்டுமே பணியாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வகை செய்வதாக அந்த சட்ட நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இந்த வயதை அடைந்தவர்கள், மேலும் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு அனுமதி அளிப்பதற்கு மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதையும் Bastion Pius Vendargon சுட்டிக்காட்டினார்.
டத்தோ சாயிட் இப்ராஹிமின் இந்த பரிந்துரை, மாமன்னர் மற்றும் பிரதமரின் பங்களிப்பை மீறுவதாக உள்ளது என்று அந்த சட்ட நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.