கோலாலம்பூர், ஜன.27-
70 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் தலைமை செயலாக்க அதிகாரி ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
புரோலிந்தாஸ் குரூப் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியான ரோஸ்தாம் ஷாரிப் தாமி என்ற அந்த 59 வயது உயர் அதிகாரி, நீதிபதி ரோஸ்லி அகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
தற்போது சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள ரோஸ்தாம், சுங்கை பெசி-உலு கிள்ளான் அடுக்கு நெடுஞ்சாலையின் குத்தகைப் பணியை பெற்றுத் தருவதாக கூறி, Satunas Technologies Sdn. Bhd. நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து 70 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கோலாலம்பூர், கம்போங் டத்தோ கிராமாட்டில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் அந்த தலைமை செயலாக்க அதிகாரி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அந்த உயர் அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.