ஜோகூர் பாரு. ஜன.28-
கடந்த வாரம் ஜோகூர் பாருவில் ஒரு பேரங்காடியில் தம்மை கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீசில் பொய் புகார் செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த மாது ஒருவருக்கு ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
சமூக உடக பிரபலமான அமீரா லைலா ஹோ என்ற 45 வயது மாது, கடந்த ஜனவர் 22 ஆம் தேதி லார்கின் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் அளித்ததாக மாஜிஸ்திரேட் ஹிடாயாதுல் ஷுஹாடா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றத்தை அந்த மாது ஒப்புக்கொண்டார். அந்த மாதுவின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. அபராதத் தொகையை அந்த மாது செலுத்தினார்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜோகூர்பாரு, தாமான் அபாட்டில் உள்ள பேரங்காடியில் தம்மை அணுகிய ஒரு தம்பதியர் தேநீர் மாதிரியை அருந்த சொன்னதாகவும், அதற்கு மறுத்ததால் தேயிலையை நுகர சொன்னதாகவும், அதன் நுகர்ந்தப் பின்னர் தமக்கு தலைசுற்றல் ஏற்பட்டு, அந்த தம்பதியர் தம்மை கடத்த முயற்சி செய்ததாக அந்த மாது புகார் அளித்து இருந்தார்.
அந்த மாது அளித்த புகாரை உண்மை என நம்பிய சமூக ஊடகப் பயனர்கள், ஜோகூர் பாருவில் பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.