அதிகாரி மீது மேலும் இரண்டு லஞ்ச குற்றச்சாட்டுகள்

ஷா ஆலாம், ஜன.28-

கோலாலம்பூர், சுங்கை பெசி-உலு கிள்ளான் அடுக்கு விரைவு நெடுஞ்சாலைத்திட்டத்தில் தொடர்புடைய குத்தகையை பெற்றுத் தருவதாக கூறி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனமான Prolintas Group நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி ரோஸ்தாம் ஷாரிப் தாமி மீது மேலும் இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

59 வயது ரோஸ்தாம், இன்று காலையில் ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நாசீர் நோர்டின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த குத்தகைத் திட்டத்தை Satunas Technogies Sdn. Bhd. நிறுவனத்திற்கு பெற்று கொடுப்பதாக கூறி, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பூச்சோங்கில் உள்ள ஓர் உணவகத்தில் 90 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப்பணத்தை பெற்றதாக ரோஸ்தாமிற்கு எதிராக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

2023 மார்ச் 27 ஆம் தேதி காஜாங்கில் உள்ள மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைமையகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் மேலும் 20 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தை கையூட்டாக பெற்றதாக அந்த உயர் அதிகாரி மீது லஞ்ச குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்விரு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS