வருடாந்திர விடுமுறையை எடுத்துக் கொள்ளும்படி தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்த முடியாது

புத்ராஜெயா, ஜன.28-

சீனப்புத்தாண்டை முன்னிட்டு பொது விடுமுறைக்கு பின்னரும், தங்கள் வர்த்தக தளங்கள் அல்லது தொழிற்சாலைகளை மூடுவதற்கு திட்டமிட்டுள்ள முதலாளிமார்கள், அக்காலகட்டத்தில் வருடாந்திர விடுமுறை அல்லது சம்பளம் இல்லாத விடுமுறையை எடுத்துக்கொள்ளும்படி தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று மனித வள அமைச்சு அறிவித்துள்ளது.

வர்த்தகத் தளங்கள் அல்லது தொழிற்சாலைகளை கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு திட்டமிட்டுள்ள முதலாளிமார்கள், தொழிலாளர்களை வருடாந்திர விடுமுறை அல்லது சம்பளம் இல்லாத விடுமுறையை எடுத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது என்று மனித வள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கான வருடாந்திர விடுமுறையை எடுத்துக்கொள்வதற்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை தொழிலாளர்கள் கொண்டுள்ளார்களே தவிர அந்த உரிமையை முதலாளிமார்கள் எடுத்துக்கொள்ள முடியாது என்று மனித வள அமைச்சு எச்சரித்துள்ளது.

விடுமுறையை எடுத்துக்கொள்ளும்படி முதலாளிமார்கள் கட்டாயப்படுத்துவார்களேயானால் 1955 ஆம் ஆண்டு வேலை சட்டம் 69 ஆவது பிரிவின் கீழ் ஆள்பல இலாகாவில் தொழிலாளர்கள் புகார் செய்ய முடியும் என்று மனித வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS