டக்கா, ஜன.28-
வங்கதேசத்தில் கூடுதல் பணிக்கான நலன்கள் கோரி ரயில்வே ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நாட்டில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய ஊழியர்களுக்கு மேலதிக நேர சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அச்சங்கம் திங்கள்கிழமை வரை அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான சேவைகள் மற்றும் வங்கதேச ரயில்வேயால் இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் உட்பட சுமார் 400 ரயில்களின் இயக்கம் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் தினமும் சுமார் 250,000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இதற்கிடையில், வங்காளதேச ரயில்வே அமைச்சகம், ரயில் பயணிகள் செவ்வாய்க்கிழமை முதல் சில முக்கியமான ரயில் பாதைகளில் பேருந்து சேவைகளில் தங்கள் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சேவையைப் பயன்படுத்துவோரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.