111 ஆண்டு கால கிச்சாப் தயாரிப்பு நிறுவனம் செயலாக்கத்தை நிறுத்தியது

கோப்பேங், ஜன.28-

சீன சமூகத்தினர் நாளை தங்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். நாடு முழுவதும் சீன சமூகத்தினர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வேளையில் 72 வயது லாவ் பாக் தோங் மிகுந்த கவலையில் உள்ளார்.

தனது மூதாதையர் கட்டி காத்து, நடத்தி வந்த 111 ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்ட கிச்சாப் தயாரிப்பு தொழிற்சாலையை மூட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப்பதாக லாவ் கூறுகிறார்.

பேரா, கோப்பேங், கம்போங் ராவா பாருவில் செயல்பட்டு வந்த பிரபல Kilang Kicap Hup Teck- கிச்சாப் தயாரிப்பு தொழிற்சாலை, இன்றுடன் செயலாக்கத்தை நிறுத்திக்கொண்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சிய கிச்சாப்பை வாடிக்கையாளர்களிடம் வழங்கிடும் கடைசி நேரப்பணியில் இன்று காலையில் அரைகால் காற்சட்டையுடன் காணப்பட்ட Low தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

தங்கள் மூதாதையரின் கிச்சாப் தயாரிப்புத் தொழிலை தொடர்ந்து ஏற்று நடத்த இளைய தலைமுறையினர் தயாராக இல்லை. எனவே கிச்சாப் தொழிற்சாலையை மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தாம் ஆளாகியிருப்பது, சீனப்பெருநாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் தம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக லாவ் கூறுகிறார்.

மூதாதையர் காத்து வந்த ஒரு கைத்தொழில் தமது அந்திமகாலத்துடன் முடிந்து விட்டதை எண்ணி மனம் வருந்துவதாக லாவ் தமது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS