நடவடிக்கை எடுக்கக்கோரி, உரிமை கட்சி சரவணனுக்கு எதிராக போலீஸ் புகார்

சிரம்பான், ஜன.30-

பொது மக்களிடம் நிதி திரட்டுவது மூலம் தங்களுக்கு உதவுவதாகக் கூறி, சமூக ஊடகமான டிக் டாக் வாயிலாக காணொளி வெளியிட்டு, தங்களுக்காக திரட்டப்பட்ட நிதி, தங்களுக்கு முழுமையாக வந்த சேரவில்லை என்று பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர், உரிமை கட்சியைச் சேர்ந்த சரவணன் நாகையாவிற்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளனர்.

சமூக ஊடக பிரபலமான நிலா என்ற நிர்மலா ராஜமாணிக்கத்தின் முன்னெடுப்பில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர், நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் சிரம்பான் நிலையத்தில் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

சரவணனின் Sinar Media Vision மூலம் தங்களுக்கு பொது மக்கள் வழங்கிய நன்கொடைகளின் மொத்த விவரங்களை சரணவன் கணக்கு காட்டவில்லை என்றும், பல்வேறு கணக்கு செலவுகளைக் கூறி, கடைசியில் சொற்பத் தொகை மட்டுமே தங்களுக்கு வழங்கியதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தங்கள் பெயரைப் பயன்படுத்தி பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி, வசூலிக்கப்பட்ட நன்கொடை தங்களுக்கு முழுமையாக வந்து சேராத பட்சத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஜெகன்மோகன், அவரின் 7 மற்றும் 9 வயது மகன்கள் எதிர்நோக்கும் சிரமத்தை , கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பதிவேற்றம் செய்த காணொளி வாயிலாக ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 699 ரிங்கிட் 12 காசு வசூலானதாக சரவணன் அறிவித்தார்.

ஜெகன் மோகனின் Hong Leong வங்கி கார்ட்டை 2024 ஆம் ஆண்டு ஜுலை 20 ஆம் தேதி வரை தன் வசம் பிடித்தம் செய்து கொண்ட சரவணன், கடைசியில் தமக்கு 10 ஆயிரத்து 500 ரிங்கிட்டை மட்டுமே வழங்கியதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

சரவணனினால் மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சிறு நீராகம் பாதிக்கப்பட்ட ஒரு டையலிஸிஸ் நோயாளியான 54 வயது Adikahi Veerapathiran, 27 வயது ஜெனிப்பர் அந்தோணி மற்றும் 36 வயது ராஜேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோருக்கு சரவணனின் Sinar Media Vision மூலம் பொது மக்கள் வழங்கிய நன்கொடை அவர்களுக்கு முழுமையாக வந்த சேரவில்லை என்று நிலா தனது போலீஸ் புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொது மக்கள் வழங்கிய நிதி உதவி தங்களுக்கு முழுமையாக வந்து சேரும், / பிரச்னை தீரும் என்று தாங்கள் மிகுந்த நம்பிக்கையாக இருந்து, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியதாக ஜெனிப்பரும், ராஜேஸ்வரியும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வேண்டும் என்று கோரும் நிலா, இது பொது மக்களின் பணம் என்பதால் அதற்கான விளக்கத்தை கொடுக்க சரவணன் தவறிவிட்டதால், வேறு வழியின்றி அவருக்கு எதிராக தாம் போலீசில் புகார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக நிலா கூறுகிறார்.

WATCH OUR LATEST NEWS