நீலாய், ஜன.30-
நீலாய் வட்டாரத்தில் கேபள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலையில் நீலாய் 1 இல் கேபள்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிள் ரோந்துப் போலீசார் விரைந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிந்தெண்டன் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் யாரும் காணாத நிலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த கார் ஒன்றில் பதுங்கியிருந்த இரு நபர்களையும், அருகில் புதரில் மறைந்திருந்த மேலும் ஒருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்ததாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.
இந்த மூவரும் களவாடியதாக நம்பப்படும் கேபள்கள், ஓர் அரிவாள், கேபலை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் மேலும் கூறினார்.
பிடிபட்ட மூவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அந்த மூவரையும் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.