Gaza- வை மேம்படுத்துவதற்கு முன்னதாக மலேசியப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர் / அரசாங்கத்திற்கு முன்னாள் மூத்த அமைச்சர் ரபிடா அஸிஸ் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜன.30-

Gaza-வை மறு கட்டமைப்பு செய்து மேம்படுத்துவதற்கு முன்னதாக, மலேசியாவில் உள்ள பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணுமாறு ஒற்றுமை அரசாங்கத்தை முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Gaza- வுடன் தன்னை பிணைத்துக்கொண்டு, அங்கு மறு கட்டமைப்பு வேலைகளை செய்வதற்கு முன்னதாக மலேசியாவில் உள்ள பிரச்னைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அம்னோ முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியான ரபிடா அஸிஸ் கேட்டுக்கொண்டார்.

Gaza- மேம்படுத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டுள்ள நோக்கம், பாராட்டத்தக்கது என்றாலும் அனைத்துலக விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னதான சொந்த மண்ணில் இருக்கக்கூடிய பிரச்னைகளுக்கு பிரதமர் முதலில் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவில் குறிப்பாக புற நகரங்களில் பள்ளிகள் இன்னமும் மோசமான நிலையில் உள்ளன. ஊடகங்களும் இதனை அடிக்கடி வெளியிட்டு வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே போன்று கிராமப்புறங்களில் அரசாங்க மருத்துவமனைகளும், வழிபாட்டுத்தலங்களும் போதுமான அளவில் இல்லை.

அரசாங்க சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, தற்போது ஓய்வுதியத் தொகையைப் பெற்று வரும் முன்னாள் அரசு ஊழியர்கள், இன்னமும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பதை ரபிடா சுட்டிக் காட்டினார்.

Pencen தொகையைப் பெற்று வருகின்ற ஓய்வுப்பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையை மறுபரிசீலனை செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பதை அரசாங்கம் சர்ச்சை செய்யக்கூடாது என்பதையும் ரபிடா வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜனவரி 24 ஆம தேதி மேல்முறையீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை ரபிடா கேள்வி எழுப்பினார்.

நாட்டுத் தலைவர்கள் அனைத்துலக விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவதைக் காட்டிலும் மலேசிய மக்களின் தேவைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று மலேசிய அரசியல் வரலாற்றில் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட ரபிடா கேட்டுக்கொண்டார்.

Gaza- மறு கட்டமைப்பு செய்வதற்கு அங்கு பள்ளிகள்,, மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தளங்களை மலேசியா நிர்மாணிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்து இருப்பது தொடர்பில் ரபிடா அஸிஸ் எதிர்வினையாற்றினார்.

WATCH OUR LATEST NEWS