போர்ட்டிக்சன், ஜன.30-
சீனப் புத்தாண்டு விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பதற்காக கிள்ளானைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலையின் ஊழியர்கள், நேற்று போர்ட்டிக்சன் கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த போது, அவர்களின் மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது.
தங்களுடன் வந்த பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் கடலில் மூழ்கி மரணம் அடைந்தது சகப் பணியாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் போர்ட்டிக்சன், பந்தாய் பத்து லீமாவில் நிகழ்ந்தது. இதில் 20 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் இளைஞர், மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மஸ்லான் ஊடின் தெரிவித்தார்.
கடலில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர், பந்தை எடுப்பதற்கு சிறிது தூரம் நீச்சல் அடித்தவாறு சென்று கொண்டிருந்த போது, நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரின் உடல் பிற்பகல் 3.12 மணியளவில் மீட்புப்படையினால் கண்டு பிடிக்கப்பட்டதாக மஸ்லான் ஊடின் குறிப்பிட்டார்.
மூன்று பேருந்துகள் மூலம் அந்த தொழிற்சாலை ஊழியர்கள் கிள்ளானிலிருந்து போர்ட்டிக்சனுக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அவர் குறிப்பிட்டார்.