லிவர்பூலைத் துரத்திப் பிடிக்க முடியும் என ஆர்சனல் நம்புகிறது

அண்மைய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போதிலும், ஆர்சனல் பிரீமியர் லீக் பட்டியலில் தற்போது முன்னணி வகிக்கும் லிவர்பூலைத் துரத்திப் பிடிக்க வேண்டியுள்ளது. ஆர்சனல் மத்தியத் திடல் ஆட்டக்காரர் டெக்லான் ரைஸ் அவ்வாறு கூறியிருக்கிறார். எனினும் ஆட்டங்கள் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 
 
எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் ஆர்சனல் அடித்த ஐந்து கோல்களில் இரண்டைப் புகுத்த ரைஸ் உதவினார். இப்பருவ பட்டத்தை வெல்லும் சவாலில் இருந்து தாங்கள் இன்னும் பின் வாங்கவில்லை என லிவர்பூலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவ்வாட்டம் அமைந்தது. 
 
ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியுள்ள லிவர்பூல், அர்செனலை விட ஆறு புள்ளிகள் கூடுதலாக வைத்துள்ளது. மகுடத்தை வெல்லும் வேட்கையில் உள்ள லிவர்பூல் இனி வரும் ஆட்டங்களில் புள்ளியை இழக்காமல் கவனமாகவே இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.  

ஆனால் ரைஸைப் பொறுத்தவரை, சாம்பியன்ஷிப்பை தீர்மானிக்கும் பயணம் இன்னும் உள்ளது. எனவே நம்பிக்கை இழக்காது இறுதிவரை போராடுவதே தங்களின் சபதம் என அவர் தெரிவித்தார். புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் தற்போது முதலாவது இடத்தையும் ஆர்சனல் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. 

WATCH OUR LATEST NEWS