சுங்கைப்பூலோவில் தோட்டத் தொழிற்சங்க தினம் கொண்டாடப்பட்டது

சுங்கை பூலோ, பிப்.4-

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்க தினம், தற்போது நாடு தழுவிய நிலையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், சுங்கை பூலோ தோட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தோட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களான பாட்ஷா, ஆறுமுகம் மற்றும் அவர்தம் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழிற்சங்க தினத்தில் தோட்டத்தைச் சேர்ந்த உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

இக்கொண்டாட்ட நிகழ்வில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநில செயலாளர் த.ம. சேகரன், தலைமையக பிரதிநிதியாக நாராயணசாமி ஆ கியோர் கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகம் சார்பில் Mohamad Zakir கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய த.ம. சேகரன், கடந்த 79 ஆண்டு காலமாக தோட்டத் தொழிற்சங்கம் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது. இந்த நன்நாளில் கடந்த காலங்களில் தொழிற்சங்கத்திற்காக சேவையாற்றியவர்களை நினைவுகூரும் வண்ணமாக தொழிற்சங்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் கடந்த கால தொழிற்சங்கப் பொறுப்பாளர்களை இந்நேரத்தில் நினைவுகூர வேண்டும் என்று த.ம. சேகரன் கேட்டுக்கொண்டார்.

சுங்கை பூலோ தோட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் இ. பெருமாள், சுப்பையா போன்றவர்கள் தோட்ட தொழிற்சங்கத்தை சிறப்பாக வழிநடத்தி தலைமையக அளவில் Exco ( எக்ஸ்கோ) , நிதி செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர். அவர்களின் சேவை பாராட்டக்கூடியது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று த.ம.சேகரன் வலியுறுத்தினார்.

மேலும் அரசாங்கம் / இந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியிலிருந்து குறைந்த பட்ச சம்பளம் 1,500 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட் உயர்த்தி, 1,700 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த 1,700 ரிங்கிட் சம்பள உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சில தோட்ட நிர்வாகங்கள், தோட்டத்தில் மருந்து தெளிப்பவர்கள் மற்றும் உரம் போடுகின்ற தொழிலாளர்களின் வேலை பழுவை அதிகரித்துள்ளதாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

பத்து தோம்பு மருந்து தெளித்த தொழிலாளர்களின் வேலை பழுவை 12 தோம்புகளாகவும், 10 மூட்டை உரம் போட்டவர்களை 15 அல்லது 20 மூட்டைகளாக அதிகரித்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனை மாநில தொழிற்சங்கம் கண்டிக்கிறது. வேலை பழுவை அதிகமாக திணித்து இருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று த.ம. சேகரன் வலியுறுத்தினார்.

தவிர புதிய சம்பள ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் 10 முதல் 12.5 விழுக்காட்டு வரையில் பாக்கி சம்பளத்தை பெறுவார்கள். குறிப்பாக செம்பனை அறுவடை என்பது கடுமையான தொழில். அவர்களுக்கு கூடுதல் தொகை கிடைப்பதில் எந்தவோர் ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் எந்த அளவிற்கு உழைக்கிறார்களோ அந்த அளவிற்கு சம்பளம் கிடைக்கும். இதனை தோட்டத் தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று த.ம. சேகரன் தமது உரையில் வலியுறுத்தினார்.

தொழிற்சங்கத்தினத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த தோட்ட கமிட்டிகளுக்கு த.ம. சேகரன் தமது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS