கோலாலம்பூர், பிப்.4-
வரும் பிப்ரவரி 10, 11 ஆகிய இரு தேதிகளில் கொண்டாடப்படும் பத்துமலை தைப்பூச விழாவையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பணிகளுக்கு இரண்டு தினங்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
பத்துமலைத் திருத்தலத்தில் இந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு ஏதுவாக பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 12.01 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முன்னிரவு 11.59 மணி வரை இலவச ரயில் சேவை வழங்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டுடன் இணைந்து போக்குவரத்து அமைச்சு இந்த இலவச ரயில் சேவையை முன்னெடுத்தள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலையில் பத்துமலை திருத்தலத்தில் உள்ள மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் பத்துகேவ்ஸ் ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக், தைப்பூச இலவச ரயில் சேவை மற்றும் ரயில் சேவைகள் அதிகரிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தவிர பத்துமலை தைப்பூச விழாவையொட்டி வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நான்கு நாட்கள், மூன்று இரவுகளுக்கு பத்துமலையை நோக்கி 24 மணி நேர ரயில் சேவை விடப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Port Klang – தஞ்சோங் மாலிம் – Port Klang ரயில் சேவை நேரத்தில் சில மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் Batu Caves – Pulau Sebang- Batu Caves ஆகிய வழித்தடங்களில் 33 ரயில் சேவைகள் விடப்படும். Batu Caves- Port Klang – Batu Caves ஆகிய வழித்தடங்களுக்கு 45 ரயில் சேவைகள் விடப்படும்.
KL Sentral – Batu Caves – KL Sentral ஆகிய வழித்தடங்களுக்கு 28 ரயில் சேவைகள் விடப்படும்.
நாள் ஒன்றுக்கு 96 ரயில் சேவைகளின் எண்ணிக்கையில் 46 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்துமலையை நோக்கி நாள் ஒன்றுக்கு கூடுதலாக 118 சேவைகள் வழங்கப்படுகிறது. நான்கு தினங்கள், மூன்று இரவுகள் மொத்தம் 494 ரயில் சேவைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.