ஜோர்ஜ்டவுன், பிப்.4-
வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தைப்பூச விழாவையொட்டி பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் வெள்ளி இரதம், பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டிலிருந்து தண்ணீர்மலை, அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலை நோக்கி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி இரதத்தை இழுப்பதற்கு 17 ஜோடி என மெத்தம் 34 காளைமாடுகள் பயன்படுத்தப்படும் என்று பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தலைவர் டாக்டர் A. நாராயணன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஜோடி காளைகளும், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவாகவே இரதத்தை இழுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 17 ஜோடி காளைகளும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே ஒவ்வொரு ஜோடி என மாற்றப்பட்டு கொண்டே இருக்கும் என்பதால் காளைகள் வதை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது.
இந்த 17 ஜோடி காளைகளும் கால்நடை இலாகாவினால் சோதனை செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நாராயணன் இன்று திசைகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.
இரத ஊர்வலத்தின் போது, பொது மக்கள், இரதம் அருகில் வரும் வரை காத்திருக்காமல், இரதம் கண் எதிரே தெரிந்தவுடன் கையெடுத்து வணங்கி, தேங்காய்களை உடைத்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தத் தொடங்கலாம்.
இதன் மூலம் வெள்ளி இரதம் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் மலையை சென்றடையவும், நேர சுணக்கத்தைக் குறைப்பதற்கும், பூஜைகள் குறித்த நேரத்தில் நடைபெறுவதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று டாக்டர் நாராயணன் விவரித்தார்.
வெள்ளி இரதம் எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்ளவு தூரத்தில் நின்று கொண்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்வதற்கு Chariot Tracker செயலி பொருத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் திறன் கைப்பேசி வாயிலாக QR குறியீட்டை ஸ்கேன் செய்து கொள்வார்களோனால் இரதம் இருக்கும் இடம்,அதன் புறப்பாட்டை தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று டாக்டர் நாராயணன் தெரிவித்தார்.