ரெம்பாவ், பிப்.5-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நெகிரி செம்பிலான், ரெம்பாவிற்கு அருகில் மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரின் இரு மகன்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இவ்விபத்து இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்து நிகழ்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான், விபத்து நடந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்து நிகழ்ந்தது. இதில் ஒரு மெக்கானிக் பலியானதாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஷைக் அப்துல் கடார் ஷைக் முகமட் தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் திடீரென்று வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கிய போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த லோரி, முன்புறம் சென்று கொண்டிருந்த லோரியில் மோதியது. அதற்கு பின்னால் வந்த லோரியும் விபத்துக்குள்ளான முன்புற லோரியில் மோதியது. இதில் நடுவில் சிக்கிக்கொண்ட போலிஸ்திரின் ஏற்றி வந்த லோரி கடுமையாக சேதமுற்றது.
இதில் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி ஓட்டுநர் பலியானார். லோரி உதவியாளர்களான அவரின் இரு மகன்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர் என்று ஷைக் அப்துல் கடார் தெரிவித்தார்.