சுங்கை பட்டாணி, பிப்.5-
கெடா மாநிலத்தல் 115 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு தைப்பூச விழா வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி, பிப்ரவரி 12 ஆம் தேதி புதன்கிழமை வரை மூன்று தினங்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது.
இவ்வாண்டு தைப்பூச விழா, கடந்த ஆண்டை விடஇன்னும் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 3 லட்சம் பக்தர்கள் இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி தெரிவித்தார்.

கொடியேற்றும் வைபவம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 9 ஆம் தேததி வரை உபயங்கள் நடைபெற்று வருவதாக பெரியசாமி விவரித்தார்.
பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு கெடா மாநில அரசாங்கம் சிறப்பு விடுமுறையை அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக மாநில அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக சுங்கை பட்டாணியில் தேவஸ்தானப் பொறுப்பாளர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இராஜேந்திரன் தெரிவித்தார்.