ஓரேப்ரோ, பிப்.5-
ஸ்வீடன், ஓரேப்ரோ நகரில் உள்ள வயது முதிர்ந்தோர் கல்வி மையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, கொல்லப்பட்டவர்களில் குற்றவாளியும் இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் பாதிக்கப்பட்ட மற்றவர்களைத் தேடும் பணி பள்ளியில் தொடர்கிறது. சம்பவத்தின் நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது.
முறையான கல்வியை நிறைவு செய்யாத அல்லது உயர்தரத்தில் படிப்பைத் தொடர மதிப்பெண்கள் பெறத் தவறிய வயது முதிர்ந்தவர்களுக்கான கல்வி மையமான ரிஸ்பெர்க்ஸ்கா பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஸ்டாக்ஹோமில் இருந்து மேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓரேப்ரோவில் குழந்தைகளுக்கான பள்ளியும் ஒரு வளாகத்தில் அமைந்துள்ளது.
நேற்று அங்கு சுமார் 10 பேர் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தச் சம்பவம் குறித்து தற்போதைக்கு இன்னும் துல்லியமான புள்ளிவிவரங்களை எங்களால் கொடுக்க முடியாது” என்று ஓரேப்ரோ காவல்துறைத் தலைவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அதன் பிறகு, இந்த சம்பவத்தில் இதுவரை 11 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறை இணையத்தளத்தில் தெரிவித்தது.
சந்தேக நபர் தனியாக செயல்பட்டதாக நம்புவதாகவும், பயங்கரவாத நடவடிக்கையாக அது இருக்காது என்றும் போலீசார் தெரிவித்தனர்.