சொஸ்மா சட்டத்தின் கீழ் 32 பேர் கைது: சுஹாகாமிடம் மகஜர்

கோலாலம்பூர், பிப்.5-

பல்வேறு திட்டமிட்ட குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள Gang TR கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 32 பேரை விடுவிக்கக் கோரி ஓர் அரசு சாரா அமைப்பான SUARAM, இன்று மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த மகஜர், SUHAKAM-மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுவாராமின் திட்டமிடல் நிர்வாகி அசுரா நஸ்ரோன் தெரிவித்தார்.

கிள்ளான், காப்பார் மற்றும் கோலசிலாங்கூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இந்த 32 பேரும், 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பதினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது, மனித உரிமை மீறலாகும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை 48 மணி நேரத்திற்கு பிறகு குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த 32 பேரும் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அவர்களைச் சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

WATCH OUR LATEST NEWS