அரசாங்கச் சேவையில் 47 ஆயிரத்து 960 இந்தியர்கள்

கோலாலம்பூர், பிப்.5-

அரசாங்கப் பொதுச் சேவைத்துறையில் 47 ஆயிரத்து 960 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுச் சேவைத்துறையின் HRMIS தரவு தளத்தின் புள்ளி விவரங்கள்படி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி வரையில் மேற்கண்ட எண்ணிக்கையில் இந்தியர்கள் அரசு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு சேவையில் பணியாற்றி வருகின்ற இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? மலாய்க்காரர் அல்லாதவர்கள் அரசு சேவையில் சேர்வதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் டாக்டர் சலிஹா மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

அரசு சேவையில் உள்ள இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையில் நிர்வாகப் பிரிவில் 255 பேர் உயர் பதவி வகித்து வருகின்றனர். 31 ஆயிரத்து 116 பேர் நிர்வாகப் பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். 16 ஆயிரத்து 589 பேர் அமலாக்கப் பிரிவில் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் போலீஸ் மற்றும் இராணுவத்தில் பணியாற்றி வருகின்ற இந்தியர்களின் எண்ணிக்கை சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.

அரசு சேவையில் பணிக்கு அமர்த்தும் அதிகாரத்தை JPA எனப்படும் பொதுச் சேவை ஆணையம் கொண்டுள்ளது. கூட்டரசு அளவிலும் மலாக்கா, பினாங்கு, நெகிரி செம்பிலான்மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு அரசு பணிகளுக்கு ஆள் சேர்க்கும் பொறுப்பில் JPA உள்ளது.

17 லட்சம் அரசு ஊழியர்களில் 28.6 விழுக்காடு அரசு ஊழியர்களை JPA பணிக்கு அமர்த்துகிறது. அரசு சேவையில் பணிக்கு அமர்த்துவதற்கு இனவாரியான கோட்டா முறை இல்லை. தகுதியின் அடிப்படையிலேயே இந்தியர்கள் உட்பட மலேசியர்கள் அனைவரும் அரசு சேவை பணிகளுக்கு எடுக்கப்படுகின்றனர் என்று டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS