கோலாலம்பூர், பிப்.5-
தலைமை ஆசிரியர்கள் அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கான பிரம்படி தண்டனையை நிறைவேற்ற முடியும்.
அதுவும், பள்ளி கட்டொழுங்கு தொடர்பான 1959 ஆம் ஆண்டு கல்வி விதிமுறைகளில் இடம் பெற்றுள்ள கடுமையான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அவ்வாறு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தவறு செய்யும் மாணவர்கள் மீது பிரம்படி உள்ளிட்ட உடல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க, பெற்றோர்களுக்கோ பொது மக்களுக்கோ நடப்பு சட்ட விதிகளில் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் சொன்னார்.
அதே சமயம், பொது இடங்களில் அல்லது பள்ளி ஒன்றுகூடல் இடங்களில் பிரம்படி தண்டனைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படக்கூடாது மற்றும் மாணவிகளையும் பிரம்பால் அடிக்க முடியாது.
மாணவர்களை அடிப்பதற்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான சிறப்பு சுற்றறிக்கையில் அவை குறிப்பிடப்பட்டிருப்பதை பட்லீனா சிடேக் சுட்டிக் காட்டினார்.