2025 பட்ஜெட், மக்களுக்கு தரமான, செளகரியமான, நட்புறவான சுகாதார வசதிகள்

கோலாலம்பூர், பிப்.6-

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுகாதார சேவைக்கு 45.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டில் 41.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை பெற்ற இரண்டாவது அமைச்சாக சுகாதாரத்துறை விளங்குகிறது.

மலேசியாவில் உயர்தரமான, சமத்துவமான, பயனுள்ள, நிலையான, ஆக்கமிகுந்த மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட சுகாதார முறையை பெறுவதற்கு 2025 பட்ஜெட்டில் சுகாதாரத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது ஒரு வலுவான முதலீடாகும் என்கிறார் ஒரு மருத்துவரான டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் வலியுறுத்துகிறார்.

வயதானவர்களின் மக்கள் தொகை, காலம் கடந்த பொது சுகாதார உள்கட்டமைப்பு, நெரிசலான சூழலைக்கொண்ட இட வசதிகள் மற்றும் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருப்பு, அதிகரித்து விட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவு, தடுக்கக்கூடிய தொற்றா நோய்களின் எண்ணிக்கை, அதனால் ஏற்படக்கூடிய சுமை முதலிய பல சவால்களை மலேசியா எதிர்கொள்கிறது.

நவீன மருத்துவ சுகாதார கவனிப்பு சவால்களின் சிக்கல் நிறைந்த உலகில் பயணிக்கும் பட்சத்தில், மலேசியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5 விழுக்காட்டுத் தொகையை , சுகாதாரத்திற்கு உயர்த்தும்படி வலியுறுத்தப்பட்டிருப்பது, அது வெறும் நிதி மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக, அது வியூகம் மிகுந்த ஒரு தார்மீக கடப்பாடாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கூறுகிறார்.

மலேசியாவின் சுகாதாரத்துறைக்கு வரவு செலவுத் திட்டமான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டத் தொகை, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் நடவடிக்கை, சுகாதாரத்துறையின் வெள்ளை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி நமது நாட்டில் வயதான மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகையின் உடனடித் தேவை மற்றும் நீண்டகால சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியமானதாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிடுகிறார்.

  1. சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்

சுகாதார அணுகலில், புவியியல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உருவாக்குவதில் இந்த நிதியின் வாயிலாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளையில் தற்போதைய வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கூறுகிறார்.

மலேசியாவில் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் யுத்த காலத்திற்கு முன்பு கட்டப்பட்டவையாகும். இவற்றை தொல்பொருள் காட்சியகம் என்றுகூட அழைக்கலாம். அவற்றின் வசதிகள் போதிய அ ளவிற்கு இல்லை. காலாவதியான உள்கட்டமைப்புகளுடன் உள்ளன.

உதாரணத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிறந்த பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனை, 1891 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அந்த மருத்துவமனையின் குடியிருப்பில் அவர் நான்கு ஆண்டுகள் வசித்து வந்துள்ளார்.

அந்த மருத்துவமனையின் சுகாதார வசதிகள், தற்போது பெரியளவில் பத்து முதல் இருபது மடங்கு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன.

ஒரு பெரிய சுகாதார பட்ஜெட் ஒதுக்கீடு, நோயாளிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இருவருக்கும் மிகவும் வசதியான மற்றும் திறன்பட்ட சூழலை வழங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தற்போதுள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் புதுப்பித்து, நவீனமயமாக்குவதறக்கு சுகாதார சேவைக்கு ஒதுக்கப்பட்ட பெரிய நிதி ஒதுக்கீடு, நிச்சயம் உதவும் என்று நாம் தாராளமாக நம்பலாம்.

  1. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல்

சுகாதார சேவையில் அதன் நிபுணர்களை கவர்ந்து இழுக்கும் நடைமுறையும், அவர்களை தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய நடவடிக்கையும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

சுகாதார பட்ஜெட்டின் அதிகரிப்பு, அரசாங்கம் சிறந்த சம்பள கட்டமைப்புகளில் முதலீடு செய்யவும், பயிற்சி திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாடு (உள்கட்டமைப்புடன் இணைந்து) போன்ற பண மற்றும் பணமற்ற ஊக்கத்தொகைகளுடன் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க உதவும்.

இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பொது சுகாதாரத் துறையில் திறமையான ஆற்றல் வாய்ந்த நிபுணர்களைத் தக்கவைத்துக் கொள்ள வகை செய்கிறது என்பதை உறுதியாக கூறலாம். இது பணியாளர்கள் மத்தியில் வருமான ஏற்றத்தாழ்வைக் குறைக்கிறது.

தவிர, இது, சுகாதாரத்துறையில் அதிக காலம் வேலை செய்யும் பணியாளர்கள் மத்தியில் பணித் தன்மை மீது இயல்பான விருப்பத்தை ஏற்படுத்துகிறது. இத்துறையில் புதியதாக இணைவதற்கு பலருக்கு ஆர்வத்தையும் பணித்தன்மையில் சமநிலையான வாழ்க்கை முறையையும் இது பெரிதும் ஊக்குவிக்கிறது.

தற்போது கிடைக்கும் அலவன்ஸ் தொகையை விட ஆன்-கால் அலவன்ஸ் தொகையையும் அதிகரிக்க இது வகை செய்கிறது. குறிப்பாக, ஒரு மணி நேரத்திற்கு சிறந்த ஊதியத்தையும் வழங்க இது அனுமதிக்கிறது.

மலேசியாவின் சுகாதாரப் பணியாளர்கள், எப்போதும் வளர்ச்சி கண்டு வரும் சுகாதார தொழில்நுட்ப சூழலை சமாளிக்க சமீபத்திய திறன்கள் மற்றும் அறிவாற்றலை பெருக்கி கொள்வது அவசியமாகும். குறிப்பாக, மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மற்றும் அடிப்படைக் கல்வியை மேம்படுத்துவதில் பட்ஜெட்டின் நிதி ஒதுக்கீடு ஒரு அர்ப்பணிப்பு மிக்கதாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

  1. நோய் தடுப்பு மற்றும் தொடக்க சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல்

நோய் தடுப்பு மற்றும் அது தொடர்பான மேம்பாட்டில் முதலீடு செய்தல் மற்றொரு அத்தியாவசிய தேவையாகும். குறிப்பாக, சிகிச்சை அளிப்பதைவிட நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிக மலிவானது என்று மருத்துவ நிபுணத்ரகள் கூறுகின்றனர்.

நோய் துவக்க தடுப்பு சுகாதாரத் திட்டங்களின் பெரும்பகுதி, ஆரம்பகால நோயறிதல், தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கவனம் செலுத்துகிறது, இதனால் நாம் “பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம். இது அதிகரித்து வரும் நமது NCD சுமைகளையும் குறைக்கலாம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது என்பது அதிக செலவாகும். நோய்கள் மிகவும் கடுமையானதாக மாறுவதற்கு முன்பே தடுப்பதன் மூலம், மலேசியா நீண்டகால சுகாதார செலவைக் குறைத்து மக்களின் சுகாதார விளைவுகளை மேம்படுத்த முடியும்.

அதற்கு மக்களுக்கான முதல் தொடர்பு புள்ளியாக முதன்மை சுகாதார மையங்களின் பங்களிப்பை விரிவுபடுத்த வேண்டும். இது பொதுவான சுகாதார நிலைமைகளைக் கண்டறிந்து விரிவுப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் மீதான சுமையைக் குறைக்கிறது.

  1. அனைத்து மலேசியர்களுக்கும் அணுகலை விரிவுபடுத்துதல்

B40 மற்றும் M40 தரப்பினருக்கான உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உ தவித் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைக்கு நிதி அதிரிக்கப்பட்டிருப்பது மூலம் அரசாங்கம் அத்தியாவசிய சிகிச்சை, மருந்துகள் மற்றும் சிறந்த சுகாதார சேவைகளுக்கான உதவித் தொகையை அதிகரிக்க முடியும்.

இந்த செலவானது, சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலுக்கு ஒரு தடையாக இல்லை என்பதை உறுதிசெய்ய முடியும். தவிர, நோயாளிகள் காத்திருப்பு நேரங்கள் மற்றும் நெரிசலைக் குறைக்கவும் இது உதவுகிறது.

சுகாதார மையங்களில் ( Primary Healthcare Centers ) வெளிநோயாளி சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், பொது சுகாதாரத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கிறது. இதன் மூலம், மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.

  1. டிஜிட்டல் சுகாதாரத்தில் மேம்பட்ட கவனம் செலுத்துதல்

சிறந்த மின் சுகாதார விவகாரங்களில் மலேசியாவில் டிஜிட்டல் சுகாதாரத்திற்கான குறுகிய பல்முனை வழிகளை நாம் பெற்றிருக்கிறோம். குறிப்பாக, மின்னணு சுகாதார பதிவுகள் (EHR) மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் பட்ஜெட் நிதியின் வாயிலாாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொலை தூர மருத்துவ சேவைகளுக்கு நிதி ஒதுக்கப்படலாம். அதே நேரத்தில் அத்தகைய சேவைகளை வழங்குவதில் மருத்தவர்கள் என்ற முறையில் நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம்.

நவீன AI-உந்துதல் கொண்ட ரோபோடிக் அறுவை சிகிச்சையில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் நமது நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள்தொகையினருக்கு சுகாதாரப் பராமரிப்புக்கான அடிப்படை சேவைக்குரிய அணுகல் எட்ட முடியாத நிலையில் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

  1. சுகாதாரப் பராமரிப்பு நிலைத்தன்மை, வயதான மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் NCD செலவு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% சுகாதாரப் பராமரிப்புக்கு ஒதுக்குவது உடனடித் தீர்வாகாது. ஆனால் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு செலவை எதிர்கொள்ளும் போது மலேசியாவின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு முறை, ஒரு நிலையானதாக இருப்பதை உறுதி செய்யும் ஓர் எதிர்கால அணுகலாகும்.
ஆரம்பத்தில், வயதான மக்களுக்கு நீண்டகால பராமரிப்பு, சிறப்பு சிகிச்சை, மறுவாழ்வு சேவைகள் மற்றும் நமது மக்கள்தொகையின் தொடக்க வயதுப் பிரிவில் உள்ள பிள்ளைகளுக்கு தொற்றா நோயினால் ஏற்படக்கூடிய உபாதைகளை குறைப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக வளங்களை கொண்டு கவனம் செலுத்த முடியும்.

இரண்டாவதாக, இந்த நிதி அதிகரிப்ப மூலம் சாமானிய மக்களின் சேமிப்பு மற்றும் அவர்களின் கையிருப்பை அழிக்கக்கூடிய நீடித்த மற்றும் பேரழிவு தரும் சுகாதாரச் செலவினங்களிலிருந்து மலேசியர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தேசிய காப்புறுதித் திட்டத்தை நிறுவுவதற்கும் இது இடமளிக்கும்.

மேலும், இந்த காப்புறுதி திட்டமானது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக , அதிகமாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ள B40 தரப்பினர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விரிவுபடுத்த உதவும். இதனால் அனைவருக்கும் சுகாதார பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. யாருமே புறந்தள்ளப்பட மாட்டார்கள்.

அனைத்து மலேசியர்களுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம் என்பது சுகாதாரப் பராமரிப்புக்கான அதிக முதலீட்டில்தான் உள்ளது. இது 2025 பட்ஜெட்டிலிருந்து தொடங்கியுள்ளது.

பிரதமரும், அவரின் பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினர்களும் நல்லதொரு பொற்காலத்தை கொண்டுள்ளனர். சுகாதார அணுகல் என்பது அவர்களுக்கு எட்ட முடியாதது அல்ல என்றாலும், செலவு நிச்சயமாக ஒரு கவலையாக இருக்கும். ஆனால், நாட்டின் சுகாதார அமைப்பு முறையில் முதலீடு செய்வது என்பது ஒரு மீள்தன்மை கொண்ட, சமமான மற்றும் நிலையான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான படிக்கட்டாகும்.

இந்த நிதியானது, சுகாதார முறையை சீரமைக்கவும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், மக்களின் சுகாதார கவனிப்பை மேம்படுத்தவும் அரசாங்கத்தை அனுமதிக்கிறது.

சுகாதாரத் துறை, தேசிய வளங்களில் அதன் நியாயமான பங்களிப்பு வழங்குவதை உறுதி செய்வதன் மூலம், மலேசியா மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதற்கு சுகாதாரத்துறையின் வெள்ளை அறிக்கை ஒரு சிறந்த தொடக்கமாகும்.

பாதுகாப்பான, சரியான நேரத்தில், திறமையான, சமமான, பயனுள்ள மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற சுகாதார சேவைகளை வழங்கவும் அனுபவிக்கவும் நாம் பாடுபடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக பட்ஜெட்டை அதிகரிப்பது நமக்குத் தேவையான மாற்றமாக இருக்கும் என்று சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிடுகிறார்.

சுகாதார உள்கட்டமைப்பின் தரங்களைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்

சுகாதார உள்கட்டமைப்பின் தரங்களைப் பராமரிக்கவும், மேம்படுத்தவும் இந்த ஆண்டில் 1.35 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழமையாகி விட்ட மருத்துவமனைகளின் கழிப்றைகள், பாழடைந்த நிலையில் உள்ள நோயாளிகளின் வார்டுகள் உட்பட சுகாதார உள்கட்டமைப்பின் தரங்கள் பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

தவிர நாடு முழுவதும் மோசமான நிலையில் உள்ள கிளினிக்குகளின் தரத்தை அரசாங்கம் தொடர்ந்து உயர்த்தவிருக்கிறது. மடானி அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பொருள்பதித்த நிலையில் ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதாவது 100 மில்லியன் ரிங்கிட் (2023), 150 மில்லியன் ரிங்கிட் ( 2024) இந்த ஆண்டு 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

WATCH OUR LATEST NEWS