வங்காளதேசப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் பூர்வீக இல்லமும் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் இல்லங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரால் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக அனைத்துல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்காளதேசத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 05 ஆம் திகதி மாணவர்கள் போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியைத் துறந்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
வங்காளதேசத்தை விட்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர் மீது மட்டும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப் படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வகையில் நேற்றிரவு ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்ய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் , முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக இணையம் வாயிலாக உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்கள் குழுவினர், டாக்காவில் உள்ள அவரது வீட்டை சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர்.
மேலும் பல போராட்டக்காரர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.