சமய இலாகாவின் உத்தேசப் பரிந்துரை : மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

பத்து மலை, பிப்.6-

முஸ்லிம் அல்லாதோர் விழாக்களுக்கும், சமய நிகழ்ச்சிகளுக்கும், இறப்பு சடங்குகளிலும் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு வழிகாட்டும் உத்தேச புதிய விதிமுறைகள், மறு ஆய்வு செய்யப்பட்டு, சரி செய்யப்பட வேண்டும் என்று இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய புதிய விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் திருமணம் போன்ற பொது நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதும் அடங்குமா? என்பது குறித்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

மலேசியா, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுடன் அமைதியாக வாழும் சூழலில் வளர்ந்த வரும் ஒரு நாடாகும். மக்கள் பல இன, பல மத சமூகத்தில் வாழ்ந்தாலும், அனைவரும் ஒற்றுமை என்ற ஒரே குடையின் கீழ் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவது மலேசியாவின் தனிச் சிறப்பாகும். இருப்பினும், சிக்கலான மற்றும் முக்கியமான சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றி வருகின்றன என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை, உண்மையிலேயே பல்வேறு அதிருப்திகளை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது என்று டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.

மக்கள் ஒன்றுபட்ட நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவரவர் தங்களின் வரம்புகள் என்ன என்பதை புரிந்து வைத்துள்ளனர். சமயத்திற்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் மக்களையும் அவர்களின் வரம்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டில், நமது தற்போதைய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் மாநில அளவிலான தைப்பூச கொண்டாட்ட விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டதை அமைச்சர் டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் நினைவில் கொள்ள வேண்டும் என்று டத்தோ சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

தைப்பூச விழாவில் மான்னரின் வருகையைக் கண்டு, இந்து பெருமக்கள் பலர் பாராட்டினர். மாமன்னரை நேரில் சந்தித்ததில் பலர் உற்சாகமடைந்தனர்.

எனவே மடானி அரசாங்கத்தின் கீழ் நாம் ஒரு பன்முக சமூகத்தில் வாழ்வதால், எந்தவொரு முடிவும், செயலும் அனைத்து மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பிரித்தாளும் கொள்கையாக இருக்கக்கூடாது.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அக்கறையையும், மக்கள் சார்ந்த அவரின் அணுகுமுறையையும் கண்டு நான் வியப்படைகிறேன், பெருமிதம் கொள்கிறேன். இந்த மாண்பும், பெரும்தன்மையும், அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். பன்முக சமயத்தவர்களிடையே இதனை ஒரு மரபுரிமையாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று டத்தோ சிவகுமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS