கோலாலம்பூர், பிப்.6-
மலேசிய தமிழ்க் கல்வி வரலாற்றில் சாதனையைத் தடம் பதிக்கும் நிகழ்ச்சியாகத் தமிழியல் இளங்கலை – 4ஆவது பட்டமளிப்பு விழா முப்பெரும் விழாவாகத் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கோலாலம்பூர் தான்ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழியல் இளங்கலைக் கல்விக்கான பட்டம், பட்டயம் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இவ்விழா, தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் மல்லிகா இராமையா தலைமையில், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு வருகையாளராகத் தமிழ்நாடு, பேராவூரணி, அரசு கலைக்கல்லூரி கெளரவ விரிவுரையாளர் முனைவர் சண்முகப்பிரியா வருகையாளராகக் கலந்து கொண்டார்.
மேலும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும், சான்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவின், முதல் சிறப்பு அங்கமாக “தமிழ்த்தாய்” விருது மூலத் தமிழறிஞர் செல்வம், முனைவர் குமரன்வேலு, தமிழறிஞர் அருள்முனைவர் ஆகிய மூன்று தமிழறிஞர்களுக்கும் வழங்கப்பட்டது.
சிறப்பு அங்கமாக மல்லிகா இராமையா எழுதிய “அகமொழி” நூல் டத்தோ பா. சகாதேவன் தலைமையில் வெளியீடு கண்டது. தகுதிபெற்ற பத்து மாந்தர்களுக்குச் சிறப்பு “விருதும்” வழங்கப்பட்டது.

சொல்லின் செல்வர் தினேஷ்வர்மன் நாகன், முத்தமிழ்ச்செல்வி புனிதமலர், கபிலன் ஆகியோர் நிகழ்ச்சி நெறியாளராக இவ்விழாவை சிறப்பாக வழிநடத்தினர்.
நிகழ்ச்சியில் கண்களைக் கவரும் நடனமும் முனைவர் சண்முகப்பிரியாவின் உரையும் வருகையாளர்களைக் கவர்ந்தது.
