ஈப்போ, பிப்.6-
கடந்த ஆண்டு ஜுன் மாதம், ஈப்போவில் உள்ள ஒரு சாலையில் 20 க்கும் மேற்பட்ட இந்திய ஆடவர்கள், வெட்டுக்கத்தி மற்றும் கைத்தடிகளைப் பயன்படுத்தி மூவரை கடுமையாகத் தாக்கி காயம் விளைவித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் நபர்கள் இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
முதலாவதாக, 25 வயது கே. கரன் என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈப்போ, கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட Jalan Institut latihan Kementerian Kesihatan Malaysia Sultan Azlan Shah, சாலையில் 30 வயது J. நடேசன் என்பவரின் இடது கை துண்டிக்கப்படும் அளவிற்கு வெட்டுக்கத்தியால் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கும் சட்டத்தின் கீழ் கரன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சம்பவத்தின் போது எரிக்கப்பட்ட Toyota Vios காரை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தம்புன் தீயணைப்பு வீரர்கள், சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த நடேசனின் கை அவயத்தை மீட்டனர்.
இதனிடையே இந்த வெட்டுக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக ஈப்போ மாஜிஸ்திரேட நீதிமன்றத்தில் கரனுடன் சேர்ந்து, அவரின் மேலும் ஐந்து நண்பர்களும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் எட்டு பேருடன் சேர்ந்த இந்த அறுவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
30 வயது என். குமரேசன், 34 வயது ஆர். நவீந்திரன், 28 வயது எஸ். காளிதாஸ், 28 வயது ஜி. லோகேந்திரன் மற்றும் 29 வயது முகமட் ஒமார் டின் சையிட் முகமட் கான் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.