குளுவாங், பிப்.6-
வரும் 2030 ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக ஒரே நேர பள்ளி முறையை அமல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள பத்து ஆயிரம் பள்ளிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பள்ளிகள் இன்னமும் முழுமையாக ஒரே நேர பள்ளி முறையை அமல்படுத்த இயலாமல் திணறி வருகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகள் வீற்றிருக்கும் பகுதிகளில் மக்களின் அடர்த்தி நிலை, மாணவர்கள் அதிகரிப்பு, இடப்பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களினால் ஒரே நேர பள்ளி முறையை முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என்று பட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.
இப்போது முதல் அதிகமான புதியப் பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. வருகின்ற 2030 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஏக காலத்தில் ஒரே நேர பள்ளி முறையில் முழுமையாக செயல்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.