பெட்டாலிங் ஜெயா, பிப்.6-
மலேசியாவில் தங்கியுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக் பொது நிகழ்வில் உரையாற்றுவதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையின் நடப்பு நிலை என்ன என்பது குறித்து ஆராயப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுடின் நசுதியோன் தெரிவித்துள்ளார்.
சாகீர் நாயிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்படும் என்று அமைச்சர் சைபுடின் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அமலாக்கத் தரப்பினரால் தேடப்பட்டு வரும் சாகீர் நாயிக் மலேசியாவில் தங்குவதற்கு நிரந்தர அந்தஸ்து பெற்ற நிலையில் அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவததற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் சாகீர் நாயிக் உரையாற்றியதாக கூறப்படுகிறது.
அப்படியென்றால் சாகீர் நாயிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்பட்டு விட்டதா? இல்லையா? என்பது குறித்து உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிள்ளான் பக்காத்தான் ஹராப்பான் எம்.பி. வீ. கணபதிராவ் நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
கணபதிராவ்வின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் சைபுடின் இன்று எதிர்வினையாற்றினார்.