கோலாலம்பூர், பிப்.6-
முஸ்லிம் அல்லாதோரின் நிகழ்ச்சிகளுக்கு முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு வகுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டல் விதிமுறைகள் தொடர்பான சர்ச்சை குறித்து நாளை நடைபெறவிருக்கும் அமைச்சவைக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் குறுகிய நேரம் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இந்த விவகாரம் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தளங்கள், சமய நிகழ்ச்சிகள் மற்றும் சவ அடக்க சடங்குகளில் முஸ்லிம் தலைவர்கள் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப்படுமானால் அது குறித்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், இஸ்லாமிய சமய மேம்பாட்டு இலாகாவான ஜாகிம் போன்ற அதிகாரத் தரப்பினரிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தி அனுமதியையும், ஒப்புதலையும் பெற வேண்டும்.
முஸ்லீம்களுக்கான இந்த புதிய வழிகாட்டல் விதிமுறைகள் தற்போது இறுதி கட்ட ஆய்வில் இருப்பதாக பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் டாக்டர் நாயிம் மொக்தார் நேற்று வெளியிட்ட அறிக்கை முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.