கோலாலம்பூர், பிப்.6-
வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படுதை முன்னிட்டு பத்துலைத் திருத்தலத்திலும், பினாங்கு, தண்ணீர் மலை கோவில் வளாகத்திலும் மனித வள அமைச்சு, KESUMA MADANI திட்டத்தை இரண்டாவது ஆண்டாக அமல்படுத்தப்படுகிறது.
KESUMA எனப்படும் மனித வள அமைச்சு தனது இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் ஒரு சமூகச் சேவையாக KESUMA MADANI திட்டத்தை அமல்படுத்துவதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்தார்.
பத்துமலைத் திருத்தலத்திலும் பினாங்கு தண்ணீர் மலையிலும் பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் இளைப்பாறுவதற்கு வசதிகள் செய்து தரப்படும். களைப்புற்றவர்கள், மூத்தக் குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் இந்த கூடாங்களில் ஓய்வுவெடுப்பதற்கும், இளைப்பாறுவற்கும் வகை செய்யப்படும்.
தைப்பூசத்தினமான பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஓய்வுத்தளம் செயல்படும். பத்துமலையில்அமைக்கப்படும் KESUMA MADANI கூடாரங்களில் ஒரே நேரத்தில் 700 பேர் இளைப்பாற முடியும். பினாங்கு தண்ணீர் மலை கூடாங்களில் 500 பேர் இளைப்பாற முடியும் என்று இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
தவிர தைப்பூச விழா சுமூகமாக நடைபெறுவதற்கு கடுமையாக தொண்டாற்றும் அரச மலேசிய போலீஸ் படையினர்,துப்புரவு தொழிலாளர்கள், நகராண்மைக்கழக ஊழியர்கள், தொண்டர்கள் இளைப்பாறவும் இந்த கூடாரங்களில் தனியிடம் ஒதுக்கித் தரப்படும் என்று ஸ்டீவன் சிம் சீ கியோங் குறிப்பிட்டார்.
தைப்பூச விழாவில் பங்கு கொள்ளும் அனைத்து தரப்பினரின் வசதியை உறுதி செய்வதற்கு Kesuma Madani- யின் இந்த திட்டம் அமைந்துள்ளதாக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, Bukit Bendera எம்.பி. Syerleena Abdul Rashid , புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran, கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்
இவ்விரு திருத்தலங்களிலும் கடந்த ஆண்டு தைப்பூச விழாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட KESUMA MADANI திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற நல்லாதரவை தொடர்ந்து இம்முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.
KESUMA-வின் 300 தொண்டர்கள் பத்துமலையிலும், 200 தொண்டர்கள் தண்ணீர் மலையிலும் மக்களுக்கு சேவையை வழங்குவர்.
இந்த கூடாரங்களில் இளைப்பாறுகிறவர்களும், பக்தர்களும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட உடல் நிலை குறித்து இலவச பரிசோதனை செய்து கொள்வதற்குரிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
தவிர மனித வள அமைச்சின் சொக்சோ பதிவுகள் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கான சொக்சோ பாதுகாப்புத் திட்டம் உட்பட மனித வள அமைச்சின் சார்பு நிறுவனங்கள் வழங்கக்கூடிய சேவைகளை இங்கே பெறலாம் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.