கோலாலம்பூர், பிப்.6-
முஸ்லீம் அல்லாதவர்களின் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்கள் தொடர்பில் எந்தவொரு முடிவும் எடுத்து, அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு, அது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஆயிர் ஈத்தாம் எம்.பி.யான வீ கா சியோங் கேட்டுக் கொண்டார்.
சமயம் தொடர்புடைய எந்தவொரு வழிகாட்டுதலாக இருந்தாலும் அது நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேணுகின்ற சூழலில் இருக்க வேண்டும் என்று வீ கா சியோங் வலியுறுத்தினார்.
உதாரணமாக சீனப்புத்தாண்டை எடுத்துக்கொண்டால் சீன சமூகத்தினர் அல்லாத பலர், இன்னமும் அது ஒரு மதம் தொடர்புடைய விழாவாக குழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலே அது சீனர்களின் ஒரு கலாச்சார விழாவாகும்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முஸ்லிம்களை அழைக்கும் நாங்கள், அவர்களை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பதில்லை என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.