கோலாலம்பூர், பிப்.6-
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கும் ஒரு மலேசியப் பிரஜையைக் காப்பாற்ற, பொது மன்னிப்புக் கோரி அரசாங்கம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கார்ப்பால் சிங் கேட்டுக்கொண்டார்.
மலேசியப் பிரஜைக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி, முந்தைய அரசாங்கத்தில் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்து கொண்ட மேல் முறையீட்டை ஒரு முன்னுதாரணமாகப் பின்பற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மன்னிப்பு கோரி சிங்கப்பூரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ராம் கர்ப்பால் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமன் தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கிறார்.
பன்னீர் செல்வம் ஒரு போதைப்பொருள் கடத்தல் காரர் அல்ல. ஆனால், போதைப் பொருள் கடத்தல் கும்பல், அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பது வழக்கின் சாராம்சத்தில் தெரியவந்துள்ளது என்று ராம் கார்ப்பால் தெரிவித்தார்.